Scroller

"ஆண்டாயிரத்து எட்டு முன்னே அன்னை எனவே நீயிருந்தாய் கூண்டாம் எட்டம் மாசியிலே குணமாய் நாராயணர் மகவாய் சான்றோர் கதிகள் பெற்றிடவே தர்மகுண்டம் பிறந்து வொரு குன்றாக் குடைக்குள் அரசாளக் கொண்டே போறேன் கண்டிரு நீ" || "முதற்றான் தவசு யுகத்தவசு என்மகனே தத்தமுள்ள இரண்டாம் தவசு சாதிக்காமே மூன்றாம் தவசு முன்னுரைத்த பெண்ணாட்கும் நன்றான முற்பிதிரு நல்ல வழிகளுக்கும்"||

அய்யாவின் அவதார மகிமைகள்


1. அய்யாவின் அவதார மகிமைகள்

ஆதியில் பரம்பொருள் ஒன்றுதான் இருந்தது. அதிலிருந்து நாதம் ஒலி பிறந்தது. ஒலியில் ஒளி பிறந்தது. ஒலி, ஒளியில் பஞ்சபூதங்களான பிரபஞ்சம் மலர்ந்தது. அதில் எண்ணிறைந்த கோடி அண்டங்களும், உயிர்களும் தோன்றின. ஆதியில் படைக்கப்பட்ட தேவர்களுக்கு இறைவன் எல்லாவித இன்பங்களையும் அருளினான். மரணம் இன்றி வாழும் தேவாமிர்தத்தையும் அளித்தான். இதனால் தங்களை இனி யாரும் வெல்ல முடியாது என்ற எண்ணம் தேவர்களுடைய மனதில் தோன்றியது. 

ஒரு சமயம் ஈசனிடமே சென்று எங்களை எதிர்க்கும் வல்லமை உள்ளவர்கள் யார் இருக்கிறார்கள் என்று அகம்பாவம் கொண்டு கேட்டனர். கருணையே வடிவான ஈசன் தேவர்களுக்கு பற்றியிருக்கும் நான் என்ற ஆணவ அழுக்கை போக்க திருவுள்ளம் கொண்டார். இதன் காரணமாக ஒரு ஞான வேள்வியை வளர்கலானார்

                                           
                                           

அய்யாவின் அவதார மகிமைகள்  10-2-2013    ஞாயிறு 

அந்த வேள்வியில் அதில் அவர்களை ( தேவர்களை ) பற்றிநின்ற அறியாமை வல்லிருள் என்ற மாசு குரோணி என்ற அசுரனாக வெளிப்பட்டது. குரோணி வாழ்ந்த காலம் நீடிய யுகம் என அழைக்கப்பட்டது. குரோணி என்ற ஆணவ இருள் விண்ணையே விழுங்க துணிந்தது.

இச்செயலைக் கண்ட திருமால் குரோணியை ஆறு துண்டுகளாக வெட்ட ஈசனிடம் வரம் வேண்டினார். உடனே ஈசன் வெட்டப்படும் ஆறு துண்டுகளும் ஆறு யுகங்களாய் அமையப்பெறும். அதில் தோன்றும் உயிரானது உமக்கே எதியாகும். வெட்டப்படும் போது உதிரும் உதிரத்திலிருந்து (இரத்தம்) கொடிய அசுரர்களும் தோன்றுவார்கள். அவர்களை எல்லாம் வெல்ல ஒவ்வொருயுகமாக நீர் அவதரித்து அசுரர்களை அழித்து தர்மயுகம் படைத்து அரசாள்வீர் என்று வரமளித்தார் ஈசர்...  
                                                                                  தொடரும்...

அய்யாவின் அவதார மகிமைகள்  2-3-2013    ஞாயிறு 


வரம் பெற்ற திருமால் ஞானம் என்னும் கூரிய வாளால் குரோணியை ஆறு துண்டுகளாக வெட்டினார். தூல உடலானது தோல், எலும்பு, நரம்பு மஜ்ஜை, குருதி, சுக்கிலம் என்ற ஆறு மூலப்பொருள்களானது. ஆறு துண்டுகள் அதன் சூச்சும நிலையினை உணர்த்துகின்றது.
இறைவன் இருதயம், தலைசிகை கவசம், நேத்திரம், அஸ்திரம் என்ற ஆறு புலன்கள் வழியாக செயல்படுகிறான். 
அறியாமையில் மூழ்கிய உயிர்கள் பிறத்தல், வளர்தல், மாறுதல் அடைதல், மறைதல் என்ற ஐந்து நிலைகளை அடைகின்றன. மேலும் அறியாமையால் வரும் விளைவுகளாவன 1.காமம் (ஆசை) 2. குரோதம் (கோபம்) 3. உலோபம் (ஈயாமை ) 4. மோகம்
( மயக்கம்) 5. மதம் ( செருக்கு ) 6. மாச்சரியம் ( பொறாமை ) ஆகும்.
                                      தொடரும்... 

                             15-7-2013 திங்கள் (Update)

அன்பர்களே இதில் நாம் ஒரு விசயத்தை மனதில் கொள்ள வேண்டும். ஏனெனில் குரோணி என்று சொல்லப்படும் அசுரன் எப்படி இருப்பான் என்று நீங்கள் கேட்கக்கூடும். அகிலத்திலே குரோணி கயிலலை விழுங்கவந்தான் என்றும், கடல் நீரை குடிக்கவந்தான் என்றும் சொல்லப்பட்டிருக்கும். ஆனால் அதனுடைய தத்துவார்த்த விளக்கம் என்பது குரோணி என்று சொல்லப்பட்டிருப்பது நம் புற கண்களுக்கு புலப்படும்  ஏதோ ஒரு மனித உருவம் என்பதல்ல. அது நம்மனதில் உள்ள காம,குரோத, உலோப,மோக, மத, மாச்சர்யம் என்ற எண்ணத்தின் மொத்த உருவம் தான் குரோணி என்பதாகும்.

இந்த ஆறு எண்ணங்களும்தான் ஆறு துண்டுகளாகின்றன என்பதை மனதில் கொள்ளுங்கள். இந்த 6 செயல்களில் சிக்குறாதவன், இவற்றை வென்றவன் ஞானி ஆகிறான். இத்தோசங்களை கொண்டவனை குரோணி என்கிறது அகிலம்.

மாசு, தோசம், மாசற்ற  கொள்கை, குற்றமின்றி வாழும் வாழ்க்கை, இப்படி உயரிய வாழ்க்கை வாழும்போது நம்மனதில் ஏற்படும் வஞ்சகம், வாது, சூது, பிறர்மோகம், களவு, பொய் என்ற 6 குற்றங்களும் வளர்கின்றன. (இவையே குரோணியின் சாராம்சமாகும்.)
                                                                                   தொடரும்...
                                            29-7-2013 திங்கள்  
           (புதிய செய்திகள் ஏற்றப்பட்டுள்ளது.)

                                     1. நீடிய யுகம்


  குரோணி பிறந்த இந்த யுகத்தை சிவன், பிம்மா உட்பட பல தேவாதி தேவர்களும்  ஒன்று கூடி நாலுமறை வேதமும், நல்லாறு சாஸ்த்திரமும் சொல்லும் ஆகமத்தினை அறிந்து மாயோனுடைய மனதில் மிக கலந்து நீடிய யுகம் என்று பெயர் சூட்டினர். அப்பொழுது தேவர் எல்லோரும் அவனுடைய முகத்தை பார்த்து சிவபெருமானின் வேள்வியில் உதித்து பிறந்த குரோணி யின் கைரேகைதனை பார்த்து எப்படி சொல்கிறார் என்றால், இவன் அறவழி என்று சொல்லக்கூடிய நல்ல செயல்களை செய்யமாட்டான். கயிலாய மலையைக்கூட விழுங்க தயங்காதவன் இறுதியில் எம்பிரான் மூலம் மரணமடைவான் என்று சொல்கிறார். 
                               அதுபோலவே குரோணி 4 முழம் உயரமும், பெரிய இரண்டு தலைகள் ஒன்றாக சேர்த்து வைத்ததுபோல் இருக்கும் இவனது தொடை. இப்படி  அதீத தோற்றமுடைய குரோணி நடந்தால் கயிலை கிடுகிடு என்று ஆடினது. பசி பசி என்ற அலறியவாறே கடல் நீரை விழுங்குகிறான். குடித்த நீர் பாதிவயிறு கூட நிரம்பாததால் பின்பும் பசியால் சத்தமிட்டுக்கொண்டே வருகிறான். எதிர்பட்ட தேவர்களை கண்டான். ஆகா நமக்கு நல்ல உணவு கிடைத்துள்ளது என்று தேவர்களையயல்லாம் விழுங்க துணிந்தான்.
                                                                               தொடரும்...

                                   6-7-2013 செவ்வாய் 
                          (புதிய செய்திகள் ஏற்றப்பட்டுள்ளது)


 இப்படி அவன் அங்கும் இங்கும் அலைந்த வேளையிலே சீதக்குரு முனிவர் புத்திசொல்கிறார். ஆனால் அதையல்லாம் அவன் கேளாமல் ஈசன் வாசம் செய்யும் கயிலாய மலையையே அவன் விழுங்க வாய்க்குள் தள்ளும்போது எம்பெருமான் தப்பிப் பிழைத்து தாவிக்குதித்து மண்ணுலகம் புகுந்து சிவனை நினைந்து கடும் தவம் புரிகிறார். தவம் இருந்த காரணத்தை ஈசன் தானறிந்து சன்யாசி வடிவம் கொண்டு யாரப்பா நீ இந்த வனாந்தரத்திலே தனியாக இருந்து என்னை நினைந்த காரணத்தை சொல் என்று கேட்க அப்போது எம்பெருமான் சன்யாசியாக வந்த சிவபெருமானிடம் தான் முன்னால் எடுத்த பிறவியின் தன்மையை எடுத்துரைக்க அதைக்கேட்ட சிவபெருமான் அவரை இறுக அணைத்து எதற்காக இப்போது என்னை அழைத்தீர் என்று கேட்கிறார். உடனே என்பெருமான் நாராயண பரம்பொருள் கயிலை சிவ ஒளிவும் கரைக் கண்டர் சக்தி மண்டபத்தையும், தேவாதி தேவர்கள் எல்லோரும் அமர்ந்து ஆண்டிருந்த மண்டபத்தையும், விழுங்கத்துணிந்த அசுரன் குரோணியை கண்டந்துண்டமாய் வெட்டி அழிக்க அதிக வரம் எனக்கு தந்தருளவேண்டும் ஈஸ்வரனே என்று வேண்டுகிறார்.
                                                                                   தொடரும்...


          10-10-2013 வியாழன்   (குண்டோமசாலிபிறப்பு) 
                          (புதிய செய்திகள் ஏற்றப்பட்டுள்ளது)

குரோணியை அழிக்க வரம் வேண்டி நின்ற எம்பெருமானாரைப் பார்த்து  ஒவ்வொரு துண்டாக வெட்டினால் தொல்லை வந்து சேரும். ஆகவே ஒரே வெட்டில் ஆறு துண்டாக அவனது உடல் விழுவதற்கு நான் அதிக வரம் தருகிறேன் என்று சிவபெருமான் சொல்கிறார். மேலும் வெட்டப்பட்ட குரோணியின் உடல் உலகத்தில் எப்படி பிறப்பெடுக்கும், என்ன என்ன செயல்களைச் செய்யும் என்றும் பிறந்த குரோணியை எவ்வாறு அழிப்பது என்றும் சிவபெருமான் கீழ்க்கண்டவாறு எடுத்துரைக்கிறார். 
       வெட்டப்படும் குரோணியின் உதிரத்திலிருந்து அசுர குலங்கள் கிளை கிளையாக குளத்தில் படந்திருக்கும் அமலைச் செடிபோல, நாற்றினுடே வளர்ந்திருக்கும் களை போல இந்த உலகத்தில் பிறப்பார்கள். அப்படி பிறப்பெடுத்த அந்த அசுரகுலங்கள் இவ்வுலகத்தில் தர்மத்திற்கு மாறான செயல்களில் ஈடுபட்டு  அவர்கள் இறக்கும் வரை உமக்கு எதிராக பெரும்பகையாய் இவ்வுலகில் செயல்படுவார்கள். அப்படி பிறப்பெடுக்கும் அசுரன் குண்டோமசாலி என்று அழைக்கப்படுவான் என்று சிவபெருமான் எடுத்துரைக்கிறார். 
                                                                                 தொடரும்..
.
               17-12-2013 புதன் (குண்டோமசாலி பிறப்பு) 
               புதிய செய்திகள் ஏற்றப்பட்டுள்ளன)


 அப்படி  பிறக்கும் குரோணியையையும் அவனுடைய அசுர குலங்களையும் அழிக்க உம்மால் முடியுமா என்று சிவபெருமான் கேட்க எம்பெருமான் உள்ளம் மிக மகிழ்ந்து நன்று நன்று ஈசுரரே நம்மோடு நீர் இருந்தால் கொன்று வருவேன் குரோணியையும் அவன் குலங்களையும் என்று சொன்ன நாரணபரம்பொருளிடம் சிவபெருமான் தீய குரோணியும் அவனோடு சேர்ந்துள்ள நீசக்குலங்கள் அத்துனை பேரும் உம்மை எதிர்த்து யுத்தம் செய்ய வரும் வேளையிலே அந்த அசுரகுலங்களுக்கு தரமம், அதரமம் பற்றி நீங்கள் எடுத்துரையுங்கள். நீங்கள் சொன்ன புத்திமதிகளை அவர்கள் கேட்க மாட்டாமல் வீண் வாதங்களும், வம்புகள் செய்ய வருவார்களேயானால் நான் சொல்கிறதுபோல செய்யுங்கள் எனது மைத்துனரே என்று ஆதி சிவபெருமான் எம் பெருமானிடம் எடுத்துரைக்கிறார்.                                        தொடரும்..